சேலம்: சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தைக் கூறி பலரையும் ஏமாற்றி ஆபாசப் படங்களில் நடிக்க வைத்த புகாரில் கைதான எடப்பாடியைச் சேர்ந்த வேல்சத்திரியன்(38) என்பவரிடமும் ராஜபாளையத்தைச் சேர்ந்த அவரது உதவியாளர் ஜெயஜோதி(23) ஆகிய இருவரிடமும் சேலம் சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் 6 நாட்களாக நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
முன்னதாக, கடந்த செப்.1 ஆம் தேதி இரும்பாலைப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி புகார் அளித்தார்.
அதில், வேல்சத்திரியன் என்பவர் சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகில் உள்ள பில்டிங்கில் நோபல் கிரியேசன்ஸ் என்ற பெயரில் சினிமா கம்பெனி நடத்திக்கொண்டு டைரக்டராக இருந்து வருவதாகவும், அவர் தயாரிக்கும் படத்தில் துணை நடிகையாக நடிப்பதற்கு சேலத்தாம்பட்டியைச் சேர்ந்த ஜாலிமணி என்பவர் மூலம் வேல்சத்திரியனுக்கு அறிமுகமாகி சினிமாவில் நடிக்க விருப்பம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு வழங்காமல் வேல்சத்திரியன் தனது அலுவலகத்தில் போன் ஆப்ரேட்டராக தன்னை பணி அமர்த்தியதாகவும், வேல்சத்திரியனும் அவரின் உதவியாளராக பணிபுரியும் ஜெயஜோதி என்பவரும் தன்னிடம் ஆபாச படத்திற்கு போஸ் கொடுத்தால் அதிக பணம் தருவதாகக் கூறியதைக் கேட்டதாகவும், அதற்கு மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதேபோல், நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இனி வேறு யாரும் பாதிக்கப்படக் கூடாது என்றும் அந்த புகாரில் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனக்கு வேல்சத்ரியன் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் இருவர் மீதும் சூரமங்கலம் அனைத்து மகளில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து பெண்களை ஆபாசமாக படமெடுத்து சேமித்து வைத்திருந்த மெமரிகார்டு, லேப்டாப், செல்போன்கள்,
கணிப்பொறி ஆகியைவகளை கைப்பற்றியதோடு, இருவரையும் சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து வேல்சத்திரியன் மற்றும் ஜெயஜோதி ஆகியோர் பணம் பெற்றுக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாகக் கூறி, பல இளம்பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டி பொது ஒழுங்கிற்கு பங்கம் ஏற்படுத்தும் வண்ணம் நடந்து கொண்டதால் இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான காவல் உதவி ஆணையர், பரிந்துரையின் பேரில் காவல் துணை வடக்கு ஆணையர் M.மாடசாமியின் சிபாரிசினை ஏற்று சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா, இருவரையும் குண்டர் சட்டத்தில் தடுப்புக்காவலில் வைக்க நேற்று (செப்.22) ஆணை பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: நடிக்க வைப்பதாக கூறி ஆபாச போட்டோ எடுத்த விவகாரம்...வாக்குமூலம் கொடுத்த போலி இயக்குநர்