சேலம் மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை, ஏற்காடு, பச்சை மலை உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவ - மாணவியர் தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை பயின்று வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின்கீழ் செயல்படும் பள்ளிகள் இவை. இந்தப் பள்ளிகளில் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சி, பொதுப்பிரிவினர் அளவிற்கு இணையாக கொண்டுவர அரசால் எடுக்கப்பட்ட முயற்சியின் விளைவாக ஏராளமான பழங்குடியின மாணவ, மாணவியர் பொருளாதார மேம்பாடு அடைந்துள்ளனர்.
அடித்தட்டு மக்களாக உள்ள பழங்குடியின மாணவ, மாணவியர் கல்வியில் மேம்பாடு அடைய பள்ளி மட்டும் போதாது. அது உண்டு உறைவிடப் பள்ளி ஆகவும் வேண்டும் என்ற நீண்டகால இலக்கோடு செயல்பட்டு வரும் இந்த அரசுப் பள்ளிகள், மலைவாழ் மக்களின் ஒரே நம்பிக்கையாக திகழ்கிறது என்றால் அது மிகையில்லை.
இந்நிலையில் சேலம் மாவட்டம், பேளூர் அடுத்த அருநூத்து மலை அடிவாரத்தில் செயல்பட்டு வரும் வெள்ளிக் கவுண்டனூர் அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருவதால், அங்கு கல்வி பயிலும் 400க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல இந்தப் பள்ளியில் போதிய தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி இல்லை என்பதால் மாணவர்களும், பணியாற்றும் ஆசிரியர்களும் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். மேலும் இங்கு உள்ள விடுதியில் காப்பாளர் பணியிடமும் காலியாக இருப்பதாலும், பள்ளிக்கு முழுமையான சுற்றுச்சுவர் இல்லை என்பதாலும் சமூக விரோதிகளின் தொல்லையும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வெள்ளிக் கவுண்டனூர் அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியை சாந்தி எஸ்தர் ராணி நமக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில்,
"எங்கள் பள்ளியில் பயின்று வரும் 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள். நீண்ட தூரம் மலைப்பகுதியில் நடந்து வந்து இந்தப் பள்ளியில் பல ஆண்டுகளாக கல்வி பயின்று வரும் அவர்கள், தற்போது பல நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, ஆசிரியர் பற்றாக்குறை எங்கள் பள்ளியில் இருக்கிறது. பழங்குடியின மாணவர்களின் ஒரே நம்பிக்கையாக இருக்கும் இந்தப் பள்ளியானது அவர்களின் எதிர்கால கனவுகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது என்பதில் ஐயமில்லை.
பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இது தொடர்பாக அரசுக்கு பல முறை நாங்கள் மனு அளித்தும் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இது மேலும் ஆசிரியர்களுக்குப் பணி சுமையை ஏற்படுத்துகிறது. எனவே, அரசு உரிய கவனம் எடுத்து காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்பி பழங்குடியின மாணவ, மாணவியரின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல வெள்ளிகவுண்டனூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அருள்மணி, அருண் ஆகியோர் கூறுகையில், ' கரோனா காலத்தில் தற்போது அரசு ஆசிரியர்களிடம் சந்தேகங்கள், விளக்கங்கள் கேட்க அனுமதி வழங்கியுள்ளதால், நாங்கள் கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு வந்து கொண்டிருக்கிறோம். எங்களது வீடு பள்ளியில் இருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்தில் மலை மேல், பெலாப்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது.
அங்கே இருந்து நாங்கள் 10 மாணவர்கள் ஒன்று சேர்ந்து நடந்தே வந்து கல்வி பயின்று வருகிறோம். பள்ளியில் போதிய தண்ணீர் வசதி இல்லை, கழிப்பறை இல்லை. அதேசமயம் இருக்கும் எந்தக் குழாய்களிலும் தண்ணீர் வருவதில்லை. இன்னும், எங்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுத்தால், நாங்கள் கல்வியில் மேலும் மேலும் உயர்வோம்.
சரியான வசதிகள் இருந்தால், மற்ற மாணவர்களைப் போல சிறப்பாக பயின்று எங்களாலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்களாக வரமுடியும். அரசு எங்களுக்குத் தொடர்ந்து உதவிகளை தடைபடாமல் வழங்கி எங்களை உயர்த்த வேண்டும்" என்று ஆர்வமுடன் வேண்டுகோள் விடுத்தார்.
ஆசிரியர், மாணவர்களின் புகார் குறித்து சேலம் மாவட்ட பழங்குடியினர் நலத் திட்ட அலுவலர் சுகந்தி பரிமளத்திடம் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தோம்.
நமது புகாரைக் கேட்ட மாவட்ட பழங்குடியினர் நலத்திட்ட அலுவலர் சுகந்தி பரிமளம் கூறுகையில், 'வெள்ளிக்கவுண்டனூர் பள்ளி மட்டுமல்ல மாவட்டத்தில் உள்ள 61 அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிடங்கள் நிறையவே காலியாக உள்ளது. அதேபோல சமையலறை, விடுதிக் காப்பாளர் பணியிடங்களும் காலியாக உள்ளது. அது உண்மைதான்.
காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எங்களது துறை தலைமைக்கு கருத்துரு அனுப்பியிருக்கிறோம். தலைமை நிச்சயம் நடவடிக்கை எடுத்து வெகு சீக்கிரம் பணியிடங்களை நிரப்பும் என்று எதிர்பார்க்கிறோம். அதேபோல பழங்குடியின மாணவர்கள் தற்போது அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மூலம் கல்வியில் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறார்கள் .
ஆண்டுக்கு ஆண்டு அவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து பட்டப்படிப்புகள் படிப்புகளை பயின்று வருகிறார்கள். அவர்களின் வளர்ச்சி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. புதிய கட்டடங்கள், வகுப்பறைகள் அனைத்தும் கட்டப்பட்டு பழங்குடியின மாணவர்களின் வாழ்க்கையை நாங்கள் உயர்த்தி வருகிறோம்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நில அபகரிப்பில் சிக்கித் தவிக்கும் பழங்குடிகள் - பலநாள் வேதனை தீர்க்கப்படுமா?