கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் மனை வணிக அதிபர் சத்யமூர்த்தி. சில நாள்களுக்கு முன்பு இவரை தொடர்புகொண்ட சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர்கள், நிலம் வாங்குவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அதனடிப்படையில் சேலத்தைச் சேர்ந்த அந்த நபர்கள், ஓசூர் சென்று விற்பனைக்காக உள்ள நிலத்தை பார்வையிட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனிடையே சேலம் திரும்பிய அந்த நபர்கள், நிலம் வாங்குவதற்காக முன்பணம் தருவதாகக் கூறி சத்யமூர்த்தியிடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
இதை நம்பிய சத்தியமூர்த்தி கடந்த ஜனவரி 12ஆம் தேதி சேலம் வந்தார். அப்போது, அவருக்காகக் காத்திருந்த அடையாளம் தெரியாத கும்பல் பணம் தருவதாகக் கூறி அவரை காரில் கடத்திச் சென்றது.
பின்னர் அவருக்கு கொலைமிரட்டல் விடுத்து வங்கி மூலமாகவும், ரொக்கமாகவும் ரூ.5 லட்சம் பணத்தை கடத்தல் கும்பல் பறித்துள்ளது. இதைத்தொடர்ந்து பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்தக் கும்பல் இன்று காலை சத்யமூர்த்தியை விடுவித்ததாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக சத்யமூர்த்தி கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார்செய்தார். புகாரின்பேரில் கொண்டலாம்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த வழக்கில் இரண்டு பேரை கைதுசெய்து அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: சினிமா பாணியில் ரவுடியை துவைத்தெடுத்த கும்பல்!