சேலம்: தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சேலத்தில் உள்ள மத்திய சிறைச்சாலையில் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “சேலம் மத்தியச் சிறையில் உள்ள கைதிகளின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தற்போது சேலம் மத்திய சிறையில் 1351 கைதிகள் உள்ளனர். பெண்கள் சிறையில் 78 பேர் உள்ளனர்.
எப்போதும் 800 கைதிகள் வரை மட்டுமே மத்தியச் சிறையில் இருக்கும் நிலையில் தற்போது கைதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. சிறையில் உள்ள கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
குற்றம் புரிந்த கைதிகளை பரிசோதனை செய்து தொற்று இல்லை எனத் தெரிந்த பிறகு சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறையில் உள்ள கைதிகளுக்கு தொற்று பாதிப்பு இல்லை. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதால் மத்தியச் சிறையில் தொற்று ஏற்படும் என்ற அச்சமும் அபாயமும் இல்லை.
கைதிகளுக்கு பயிற்சி
கைதிகளுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்தியச் சிறையில் உள்ள கைதிகளுக்கு உரிய பயிற்சி வழங்கி அவர்களின் திறன்களை மேம்படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் கைத்தொழில் செய்து வருகின்றனர்.
குறிப்பாக அரசு மருத்துவமனைக்கு தேவையான பிரெட் உணவுப் பொருள்கள் தயாரித்து வழங்குகின்றனர். இதன் மூலம் ஒவ்வொரு கைதியும் மாதம் 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுகின்றனர்.
பல ஆண்டுகளாக சிறைவாசத்தில் உள்ள கைதிகளை விடுதலை செய்யும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.
எழுவர் விடுதலை
தற்போது நன்னடத்தை அடிப்படையில் 60 பேரின் விடுதலை குறித்து அரசாணை வெளியிடப்பட்டு ஆளுநரிடம் அனுப்பப்பட்டுள்ளது . விரைவில் 60 பேரின் விடுதலை நடைமுறைக்கு வரும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. அதில் உச்ச நீதிமன்றம் நல்ல முடிவை தரும் என எதிர்பார்க்கிறோம்.
ஏற்கனவே ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநரிடம் தெரிவித்திருந்தோம். மீண்டும் இது குறித்து ஆளுநரிடம் மீண்டும் அழுத்தம் தரப்படும்" என்று தெரிவித்தார்.
பேட்டியின் போது சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர். பார்த்திபன் , சேலம் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் இரா .ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:அடுக்குமாடி குடியிருப்பு விபத்து; புதிய குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணை