ஒரு பாடல் உடல் என்று எடுத்துக்கொண்டால் அதற்கு வரிகள் உடைகள். அந்த உடலை நடமாட வைப்பதற்கும், நடனமாட வைப்பதற்கும் உயிரான குரல் வேண்டும். அப்படிப்பட்ட குரலின் உயிர் குலையாமல் ஐந்து தலைமுறைகளுக்குப் பொருந்திப்போவது சாதாரண விஷயமில்லை. அதைத்தான் எஸ்பிபி செய்திருந்தார். மண்ணை விட்டு மறைந்த அந்த மாபெரும் கலைஞனின் 75ஆவது பிறந்தநாள் இன்று. அவர் இல்லாத இடத்தை அவரது பாடல்கள் நிரப்பிக்கொண்டிருக்கிறது.
அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சேலத்தை சேர்ந்த ரசிகர் ஒருவர் அவரது பாடல் வரிகளாலேயே அவரது உருவத்தை ஓவியமாக வரைந்து வெளியிட்டுள்ளார். சேலம் அல்லிக்குட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் தனியார் நட்சத்திர விடுதியில் சமையல்கலை நிபுணராக பணியாற்றி வருகிறார். ஓவியம் வரைவதிலும் ஆர்வம் கொண்ட இவர் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் மீது அளவற்ற பிரியம் வைத்துள்ளார்.
அவரின் உருவத்தை பாடல் வரிகளால் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 1969ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை எஸ்பிபி பாடிய தலைசிறந்த 1270 பாடல்களின் முதல் வரியை கொண்டு, தத்ரூபமான ஓவியம் வரைந்துள்ளார். குறிப்பாக ஆயிரம் நிலவே வா முதல் அண்ணாத்தே அண்ணாத்தே பாடல் வரை உள்ள பாடல்களின் முதல் வரியைக் கொண்டு இந்த ஓவியத்தை வரைந்துள்ளார். சரியாக 10 மணி நேரத்திற்குள் ஒரே பேப்பரில் சிறிய எழுத்துக்களை எழுதி மைக்ரோ நீமிங் ஆர்ட்டாக இதை படைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் பாடலுக்கு மயங்காதவர்களே இல்லை. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை 16 மொழியில் பாடி உலக சாதனை படைத்துள்ளார். அவருக்காக என்னுடைய சிறிய முயற்சியாக அவருடைய பிறந்த தினமான இன்று அவரின் உருவத்தை வரைந்து வெளியிட்டுள்ளேன். இந்த ஓவியத்தை அவரின் குடும்பத்தாரிடம் கொண்டுபோய் சேர்ப்பேன்" என்று கூறினார் .