சேலம்: மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக செவிலியர்களை நியமிக்க வலியுறுத்தி செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துவருகிறது. கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் செவிலியர்களுக்கு சத்தான உணவு, தங்கும் இடம் ஏற்பாடு செய்து தரக் கோரி செவிலியர்கள் பலமுறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதனிடம் கோரிக்கை வைத்துவந்தனர்.
மேலும், குறைந்த அளவிலான செவிலியர்களைக் கொண்டு கரோனா சிகிச்சை பிரிவில் பணி செய்ய மருத்துவமனை நிர்வாகம் வற்புறுத்தி வருவதாகவும் புகாரெழுந்தது. இந்த புகார்கள் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் அவர்களிடமும் மனு வழங்கியும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கரோனா சிறப்புப் பிரிவிலும், மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் செவிலியர்கள் கூடுதல் செவிலியர்களை நியமிக்க வேண்டும்; செவிலியர்களுக்கு முறையான உணவு இருப்பிட வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
செவிலியர்களை இந்த திடீர் வேலை நிறுத்த போராட்டத்தால் சேலம் அரசு மருத்துவமனை வளாகம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. போராட்டம் தொடர்பாக செவிலியர் சுதா கூறும்போது, 2016ஆம் ஆண்டு முதல் சேலம் அரசு மருத்துவமனைக்கு செவிலியர்களை நியமிக்க வலியுறுத்தி கோரிக்கைகள் வைத்தும் இதுவரை செவிலியர்கள் நியமிக்கப்படவில்லை. 1500 பேர் பணியாற்ற வேண்டிய இந்த அரசு மருத்துவமனையில் 350 செவிலியர்கள் மட்டுமே தற்போது பணியாற்றி வருகின்றனர்.
இதனால் அதிக பணிச்சுமைக்கு ஆளாகியுள்ளோம். மேலும் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்கு 80 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர்கள் விதம் தற்போது பணி செய்து வருகிறோம். இதனால் அதிகளவில் மன உளைச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளோம். மேலும் தற்போது போதிய நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகள் வழங்கப்படாததால் 30க்கு மேற்பட்ட செவிலியர்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவ விடுப்பு எடுத்துச் சென்றுள்ளனர்.
பலமுறை எங்கள் குறைகளை அமைச்சர் விஜயபாஸ்கரின் சேலம் வருகையின் போது தெரிவித்திருந்தோம். ஆனால் எங்களை அவர் கண்டுகொள்ளவில்லை. எங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும் என மருத்துவமனை நிர்வாகம் உத்தரவாதம் வழங்கினால் மட்டுமே நாங்கள் பணிக்குச் செல்வோம்" எனக் கூறினார்.