தமிழகத்தில் கரோனா பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த மே, ஜூன் மாதங்களை ஒப்பிடும்போது கரோனா பரவல் குறைவாகவே இருக்கிறது. ஆனால், அரசியல் இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு தொடர்ந்து கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. வரவிருக்கும் தேர்தலுக்காக பரப்புரையில் மும்முரமாகியுள்ள அவர்களில் பலர், பல இடங்களுக்கும் சென்று வருவதால் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர், தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
கரோனா தீவிர பொதுமுடக்க காலத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் மாவட்டம் முழுவதும் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் எனும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் மூலிகைக் கண்காட்சி!