ஓமலூர் அருகே கமலாபுரம் கிராமம் அருகே 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தின் திருவிழா என்றால் அது காமலாபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாதான். இந்த மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் அக்கிராம மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது.
அம்மன் பண்டிகையின்போது, அந்த ஊரில் வசிக்கும் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து சாதி, மதம் பார்க்காமல் பாரம்பரிய நடனமான மாரியம்மன் நடனத்தை ஆடுவது வழக்கம். மேலும் நடனம் ஆடிடும் மக்கள், தொடர்ந்து 15 நாட்கள் விரதமிருந்து மாரியம்மனை வணங்குவர்.
இந்நிலையில், இக்கோயிலின் சித்திரைத் திருவிழாவானது ஏப்ரல் 22ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
திருவிழாவின் ஒருபகுதியாக கிராம மக்கள் அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை தொடர்ந்து எட்டு நாட்கள் பாரம்பரிய நடனமாடி வருகின்றனர்.
12 தாளங்களைக் கொண்ட ஆட்டத்தில் ஒன்று முதல் பன்னிரெண்டு விதமான ஆட்டங்களான கல்யாணிதாளம், நொங்கு தாளம், அடதாளம், சட்டூர்தாளம் உள்ளிட்ட ஆட்டத்தை ஆடி மகிழ்ந்தனர். இது பாரம்பரிய வழக்கமாகவே இருக்கிறது. இந்நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் திரண்டு வந்து ஆட்டத்தை ரசித்துச் சென்றனர்.