சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த ரிக் வண்டி தொழிலாளியொருவர், மார்ச் மாதம் ஹைதராபாத் சென்றுவிட்டு, ஏப்ரல் 1ஆம் தேதி வீடு திரும்பினார். வெளிமாநிலம் சென்று வந்ததால், மாநகராட்சி சார்பாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இதன்படி, வீட்டின் முன்பு கரோனா நோட்டீசும் ஒட்டப்பட்டது.
இந்நிலையில், 7 நாட்களாக வீட்டில் இயல்பாக இருந்தவர், நேற்றிரவு 10 மணியளவில் திடீரென உயிரிழந்தார். இதனையடுத்து, வருவாய்த்துறை, காவல்துறையினர் நேற்று நள்ளிரவு உயிரிழந்தவர் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ரிக் வண்டி தொழிலாளி அதிக அளவில் மது அருந்தியதால், கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.
அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு காரணங்களுக்காக கிருமிநாசினி பொடி தூவியும், மருந்து தெளித்தும் மாநகராட்சி ஊழியர்கள் தூய்மைப்படுத்தினர்.