சேலம் மாவட்டம், கெங்கவல்லி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட தலைவாசல் பகுதியில், இன்று இரண்டாவது நாளாக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்ட விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க அலுவலர்களை நாடிச் செல்லும் நிலை மாறி, அலுவலர்கள் பொது மக்களைத் தேடிச் சென்று சந்திக்கும் நிலை ஏற்படவேண்டும் என கருதிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இதற்காக சிறப்பு குறைதீர் திட்டத்தை கொண்டுவந்தார். இந்த திட்டத்தின்படி அலுவலர்கள் பொதுமக்களை தேடிச் சென்று மனு பெற்று அதன்மீது உடனே நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்தத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் மாவட்டம் வனவாசியில் தொடங்கி வைத்தார். பின்னர் எடப்பாடியில் நடந்த நிகழ்ச்சியிலும், கொங்கணாபுரத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்ற அவர், சிறப்பு குறைதீர் முகாம் திட்டத்தின் கீழ் பொது மக்களிடமிருந்து மனு பெற்று குறைகளை கேட்டறிந்தார். இன்று இரண்டாவது நாளாக சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் மனுக்களை பெற்ற அவர், அலுவலர்களை உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.