சேலம்: பள்ளப்பட்டி ஏரி அருகே முருகன், நித்யா தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர்களது கடைசி மகள் தீபிகா தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை(டிச.21) இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்ற சிறுமி, நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராத நிலையில் சுற்றியுள்ள அனைத்துப் பகுதியிலும் பெற்றோர் தேடி வந்துள்ளனர்.
அப்போது பள்ளப்பட்டி ஏரியில் குழந்தையின் செருப்பு இருப்பதை கண்டு தண்ணீரில் தேடிப் பார்த்தபோது, குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இதனையடுத்து குழந்தையின் உடலை மீட்டனர்.
பின்னர் தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் உடலை உடற்கூராய்வுக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பள்ளபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து மக்கள் பேசுகையில், பள்ளப்பட்டி - சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஏரியின் கரையில் பலப்படுத்தப்பட்டு அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஏரியின் நடுவே பாதை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பகுதியில் தடுப்புச் சுவர்கள் ஏதும் இல்லை. மேலும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணி நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஏரி மேம்பாட்டுப் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளதால், இது போன்ற சம்பவம் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மதுரையில் எலும்பு வங்கி - திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்ரமணியன்