சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சூரமங்கலம் செஞ்சிக்கோட்டைப் பகுதியில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு நீர்வழித் தடங்களை தூர்வாரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் பார்வையிட்டார். கடந்த இரு தினங்களுக்கு முன் சேலத்தில் பல பகுதிகளில் 64 மில்லி மீட்டர் அளவிலான மழை பதிவானது. இதனைத் தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.
இந்நிலையில், சேலத்தாம்பட்டி ஊராட்சிப் பகுதியில் உள்ள சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பியதையடுத்து, ஏரியின் உபரிநீர், சிவதாபுரம் வழியாக திருமணிமுத்தாறை சென்றடைகிறது. உபரிநீர் அதிகமாக வெளியேறியதால் சிவதாபுரம் பகுதியில் தண்ணீர் தேங்கி அந்த நீர்வழித் தடங்களிலுள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், செஞ்சிக்கோட்டைப் பகுதியில் ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகில் தூர்வாரப்படாமல் இருந்த நீர்ரோடையை 26 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார். இந்த ஓடையில் தூர்வாரி அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்வதால் தாழ்வானப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் வடியத் தொடங்கியுள்ளது. இந்த ஓடை திருமணிமுத்தாறில் கலக்கும் இடத்திலுள்ள முகத்துவாரம் ஆழப்படுத்தி கரைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன.
தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அம்மன் நகர், திருமுருகன் நகர், முத்துநாயக்கன் காலனி, மெய்யன் தெரு, செஞ்சிக்கோட்டை, சிவதாபுரம் மெயின் ரோடு, கந்தம்பட்டி, சரவண பிள்ளை தோட்டம் ஆகிய பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் வடிய தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: ’ஆம்பூர் ஸ்டார் பிரியாணி’ பெயரை பயன்படுத்த மற்ற உணவகங்களுக்குத் தடை!