சேலம்: கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த தடுப்பூசி செலுத்தும் பணி சேலத்தில் இன்று மீண்டும் தொடங்கியது. அழகாபுரம் பகுதியில் உள்ள தடுப்பூசி செலுத்தும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்," கரோனா ஊரடங்கால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவியர் கட்டணம் கட்ட இயலாமல் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளனர். அந்த வகையில் சிரமப்படும் மாணவ-மாணவியருக்கு உதவும் வகையில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்டத்திலுள்ள வங்கியாளர்கள் அரசு மற்றும் தனியார் கல்லூரி முதல்வர்கள் நிர்வாகிகள் மற்றும் கல்வித்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது.
அதில் ஏழை, எளிய மாணவ மாணவர்களுக்கு வங்கிகளில் கல்விக்கடன் வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும், இதன் மூலம் உயர்கல்வி படிக்கும் மாணவ மாணவர்களுக்கு ஏற்படும் நன்மை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. கல்வி கடன் வழங்குவதால் உயர் கல்வி பயில இயலாமல் இடையில் நிற்கும் மாணவ மாணவியருக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.
இந்த மையத்தின் மூலம் கல்விக்கடன் குறித்த தெளிவான விவரங்களும், அதற்கு தேவையான ஆவணங்கள் குறித்தும் விளக்கப்படும். மாவட்ட அளவில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வங்கியாளர்கள் ஒருங்கிணைக்கும் வகையில் பொறுப்பு அலுவலராக திட்ட அலுவலர்( மகளிர் திட்டம்) நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் தொடர்பு எண் 9444094335 . இந்த எண்ணில் தொடர்பு கொண்டு மாணவ மாணவியர் தங்களின் பள்ளி மற்றும் கல்லூரி கல்வியை தொடர கடன் வசதி பெறலாம்" என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், " கடந்த மூன்று நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் 16 இடங்கள் உட்பட மாவட்டத்தில் மொத்தம் 121 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
நாள்தோறும் தடுப்பு ஊசி செலுத்தப்படும் விவரங்களை அந்தந்த மையத்தில் பலகைகளில் எழுதி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது .
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் அமைந்துள்ள மையத்திற்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள கொள்ளலாம் . சேலம் மாவட்டத்திற்கு நேற்று 32,750 தடுப்பூசிகள் வந்து சேர்ந்தது. இதுவரை 5,61,316 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.