சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் அ.பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.திவாகர், கால்நடைபராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் புருஷோத்தமன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கோ.ராஜேந்திரபிரசாத், வேளாண் இணை இயக்குநர் பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆர்.செல்லதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "முதலமைச்சர் பழனிசாமி விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மேலும் நீடித்த வறட்சி நில மேலாண்மை கூட்டுப் பண்ணையம், நுண்ணீர் பாசனம் மூலம் நீர் மேலாண்மை, இயற்கை உர வேளாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, வேளாண் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கும் விவசாயிகளின் வருவாயை உயர்த்துவற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழையளவு 997.9 மிமீ ஆகும். நடப்பாண்டில் 1.4 மி.மீ மழை பெய்துள்ளது. நடப்பாண்டில் 187.931 மெட்ரிக் டன் நெல், 47.218 மெட்ரிக் டன் சிறுதானியங்கள், 149.256 மெட்ரிக் டன் பயறுவகைகள், 162.560 மெட்ரிக் டன் எண்ணெய் வித்துகள், 6.387 மெட்ரிக் டன் பருத்தி, என்ற அளவில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 27,153 மெட்ரிக் டன் யூரியா, 13,093 மெட்ரிக் டன் டி.ஏ.பி, 13,137 மெட்ரிக் டன் பொட்டாஷ், 21,773 மெட்ரிக் டன் என்ற அளவில் இரசாயன உரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பழங்கள், காய்கறிகள், வாசனை திரவியங்கள், மலைப்பயிர்கள், மருத்துவப் பயிர்கள், மலர்கள் ஆகியவைகளுக்கு 74,073 ஹெக்டரில் பயிர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 72,032.80 ஹெக்டரில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பட்டுவளர்ச்சித்துறையின் சார்பில் 568.20 ஏக்கரில் மல்பெரி சாகுபடியும், 6,16,605 கி.கி பட்டுக்கூடு உற்பத்தியும் செய்யப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடப்பாண்டில் விவசாயிகளுக்கு இதுவரை ரூ.540.60 கோடி குறுகிய கால கடன் மற்றும் ரூ.28.02 கோடி மத்திய கால முதலீட்டு கடனும் வழங்கப்பட்டுள்ளன. " என்று தெரிவித்தார்.
முன்னதாக, தென்னையில் வெள்ளை சுருள் பூச்சி தாக்குதலை தடுக்கும் முறைகள் குறித்தும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ரகங்கள் குறித்தும் மின்திரை விளக்கப்படம் மூலமாக விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதையும் படிங்க:
சிஏஏ-ஐ பாடத்திட்டத்தில் இணைப்பதா? மாயாவதி காட்டம்