சேலம்: மேட்டூர் அணையில் இருந்து 6 கி.மீ., தொலைவில் செக்கானூர் கதவணை மின்நிலையம் வரை தேக்கியுள்ள தண்ணீரைக் கொண்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்வாறு தேக்கி வைக்கப்பட்ட அந்த நீரில் ஏராளமான மீன்கள் உள்ளன. இங்குள்ள மீன்களைப் பிடித்து ஏராளமான மீனவர்கள் வாழ்வாதாரம் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று (மே 26) காலை மாதையன் குட்டை, நாட்டாமங்கலம், காவிரி கிராஸ் ஆகியப் பகுதிகளில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன.
இறந்து மிதக்கும் மீன்கள்: இதனால், காவிரிக் கரையில் துர்நாற்றம் வீசுகிறது. பலவகை மீன்கள் இருந்தாலும் குறிப்பாக அரஞ்சான் மீன்கள் மட்டுமே செத்து மிதக்கின்றன. மேலும், மேட்டூர் காவிரியில் ஆங்காங்கே கலக்கின்ற ஆலைகளின் கழிவுநீர் மற்றும் மேட்டூர் அனல் நிலைய கழிவுநீர் கலப்பதால் கனிமங்கள் அதிகரித்து மீன்கள் செத்து மிதக்கின்றதா? என்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இவ்வாறு மீன்கள் ஆண்டுதோறும் பல்வேறு காரணங்களால் இறந்து மிதப்பதால் மேட்டூர் நீர்த்தேக்கம் மற்றும் காவிரியில் மீன்வளம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
மேட்டூர் பகுதியில் மீன்வளம் பாதிக்கும் அபாயம்: இதனைத்தடுக்க தமிழ்நாடு மீன்வளத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியன இணைந்து செயல்பட்டு மீன்வளத்தைப் பாதுகாக்கவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மீன்வளத்துறை அலுவலர்கள் கூறுகையில், ’கடும் வெப்பம் காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மீன்கள் இறந்துள்ளதாக’ தெரிவித்தனர். இறந்த மீன்களை ஏராளமான கூடை கூடையாக அள்ளிச் சென்றனர்.
இதையும் படிங்க: காய்ந்த மிளகாய் கிலோ ரூ.280 - விவசாயிகள் ஹாப்பி - வாடிக்கையாளர்கள் விரக்தி