ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சேலம் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமான ஏற்காட்டிற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஏற்காடு நுழைவுப் பகுதியில் கடந்த சில மாதங்களாக துர்நாற்றம் வீசுவதாக சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
ஆனால் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் எதிர்புறம் மலைபோல் குப்பை கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வந்தது. அந்த குப்பை கழிவுகளில் கால்நடைகள் தினமும் மேய்வது வழக்கமாக இருந்தது.ஏற்காடு டவுன் பகுதிகளில் இயங்கி வரும் நூற்றுக்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்படும் உணவு கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் இந்தப் பகுதியில் தொடர்ந்து கொட்டப்படுகிறது.
இதனால் கடுமையான துர்நாற்றம் அப்பகுதியில் வீசுவது வாடிக்கையாக மாறிவிட்டது. கடந்த 2013 14 ஆம் ஆண்டு 40 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக ஏற்காடு வட்டார வள சேவை மையம் கட்டப்பட்டது. இதனை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கணொளி மூலம் திறந்து வைத்தார். இந்தப் புதிய கட்டடம் செயல்படாமல் பூட்டி வைக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக மாட்டுத் தொழுவமாகவும், குப்பைக் கிடங்காகவும் மாறிப்போனது.
இந்த அவல நிலை குறித்து ஈடிவி பாரத் தளம் செய்தி வெளியிட்டது. அச்செய்தி ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலர், ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.ஏற்காடு வட்டார வள சேவை மையத்தின் அவல நிலையை மாற்றி, கட்டடம் புதுப்பிக்கப்பட்டு எந்த நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறும் வகையில், அரசு மக்கள் பயன்பாட்டிற்கு புதிய கட்டடம் வழங்கப்படும் என அலுவலர்கள் உறுதி அளித்து அதற்கான பணியை இன்று தொடங்கி உள்ளனர்.
இதானல், மிக விரைவில் வட்டார வள மைய கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது ஏற்காடு வாசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல குப்பை கிடங்கு பிரச்சனை மிக விரைவில் தீர்க்கப்பட்டு, கழிவுகளிலிருந்து பயோ கேஸ் தயாரிக்கப்பட்டு, அதுவும் மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் சில வாரங்களில் கொண்டு வரப்படும் என்றும் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உறுதியளித்துள்ளனர்.