சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் காந்திபுரம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு வருவாய் துறை சார்பில் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை . காந்திபுரம் மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுமனை கேட்டு மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், அமைச்சர், முதலமைச்சர் என அனைவரிடமும் பலமுறை மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரையிலும் எடுக்கவில்லை.
இதையொட்டி சில ஆண்டுகளாக ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல கட்ட போராட்டங்களை செய்தனர். போராட்டத்தில் ஈடுபடும்போதேல்லாம் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அனுப்பிவைப்பதை அரசு அலுவலர்கள் வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
இதற்கு மேலும் பொறுமை கொள்ளாத மக்கள் இன்று ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்டோர் திரண்டு உடனடியாக தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், இல்லையென்றால் தங்களுக்கு அரசு வழங்கிய குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை ஆகியவைகளை அரசிடமே திருப்பி ஒப்படைப்பதாக தெரிவித்தார்கள் .
இதையறிந்த ஆத்தூர் வட்டாட்சியர் பிரகாஷ், முற்றுகையிட்ட மக்களிடத்தில் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அனைவருக்கும் ஒரு மாத காலத்திற்குள் வீட்டுமனை பட்டா வழங்குவதாக உறுதியளித்தார். பின்னர் முற்றுகையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.