சேலம்: நியாய விலைக் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம், பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கினர்.
தைப் பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக, 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பாக 2,500 ரூபாய் பணம், அரிசி, சர்க்கரை, கரும்பு, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் ஆகியவைகளுடன் ஒரு துணிப்பை இணைத்து வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி டிசம்பர் 19 ஆம் தேதி அன்று அறிவித்திருந்தார். இதற்கான டோக்கன் டிசம்பர் 26ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனடிப்படையில், இன்று முதல் சேலம் மாநகர பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்களை நியாய விலை கடை ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு நேராகச் சென்று வழங்கி வருகின்றனர்.
சேலம், அரிசிபாளையம் பகுதியிலுள்ள நாராயணசாமிபுரம், ரத்தினசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் டோக்கன் கொடுப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பை எப்போது வந்து வாங்க வேண்டும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் நியாய விலைக் கடை ஊழியர்கள் பொது மக்களுக்கு விளக்கமளித்து வருகின்றனர்.
அடுத்த 4 நாள்களுக்குள் டோக்கன் வழங்கும் பணிகள் முடிவடைந்து விடும் என்று அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. குறிப்பாக தினசரி 200 நபர்களுக்கு வழங்கப்படும் எனவும், ஒரு மணி நேரத்திற்கு 20 நபர்கள் வீதம் காலை 100 நபர்களுக்கு, மாலை 100 நபர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பை, குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள குடும்ப நபர் ஒருவர் நியாயவிலை கடைக்கு நேரில் வந்து அவரின் கைரேகை, குடும்ப அட்டை விபரங்கள் ஆகியவை சரிபார்க்கப்பட்ட பிறகு , பெற்றுக்கொள்ளும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கைரேகையில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால், நபர் குறித்து தெளிவாக தெரிந்துகொண்டு பொருள்களை வழங்கலாம் என்று அமைச்சர் ஆர்.பி உதய்குமார் இன்று தெரிவித்துள்ளார்.