சேலம் தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்றுவந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள், அக்.13ஆம் தேதி நள்ளிரவு 12.15 மணிக்கு காலமானார். அவரது மறைவிற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில், தவசி அம்மாளுக்கு மூன்றாவது நாள் (அக். 15) சடங்கு சிலுவம்பாளையத்தில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் முதலமைச்சருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன்,"நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயாரின் ஆசீர்வாதம் அனைவருக்கும் உண்டு. அவர் முதலமைச்சருக்கு பக்கபலமாக இருந்து பல்வேறு வகையில் ஊக்கத்தை அளித்தவர்.
அவரை இழந்து வாடும் முதலமைச்சருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பாஜக சார்பில் எனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்துப் பேசிய புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ சி சண்முகம், "மண்ணுலகிலிருந்து முதலமைச்சருக்கு பல்வேறு வகையில் ஊக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்த அவர், தற்போது விண்ணுலகிலிருந்து மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராக வருவார் என வாழ்த்திக் கொண்டிருக்கிறார்.
எங்களது கட்சி சார்பில் முதலமைச்சருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் பழனிசாமியின் தாயாருக்கு குடும்ப வழக்கப்படி 3ஆம் நாள் சடங்கு!