சேலம்: அம்மாபேட்டை மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் பிரபு (39). இவர், வாழையிலை கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி ஷாலினி (22). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
ஷாலினி கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் ஆண் நண்பர்களுடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதை கணவர் பலமுறை கண்டித்தும் கேட்காததால் மனைவிடம் இருந்த செல்போனை கணவர் பறித்துக் கொண்டுள்ளார்.
இருப்பினும் கணவருக்குத் தெரியாமல் அடிக்கடி செல்போனில் ரகசியமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 02) நள்ளிரவு ஒரு மணியளவில் ஷாலினி கூச்சலிட்டவாரு வீட்டின் வெளியே வந்துள்ளார்.
சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்த கணவர்
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று அவரிடம் விசாரித்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வீட்டினுள் நுழைந்து தனது நகையை பறித்துச் சென்றுவிட்டனர், அவர்களைத் தடுத்த தனது கணவரை கொலை செய்துவிட்டனர் எனக் கூறியுள்ளார்.
உடனே அக்கம்பக்கத்தினர் வீட்டினுள் சென்று பார்த்தபோது பிரபு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆனால், பிரபு மரணத்தில் சந்தேகம் இருப்பதை அறிந்த அவர்கள் இது குறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
மனைவியிடம் விசாரணை
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பிரபுவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தம்பதிக்கு இடையே உள்ள பிரச்னை குறித்து அக்கம்பக்கத்தினர் விரிவாக கூறியதையடுத்து, ஷாலினியை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனை, குடும்பத்தினரோடு சேர்ந்து கொன்ற மனைவி