சேலம் மாவட்டத்தில் தனது இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையை நேற்று தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்றும் தொடர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார். இதனிடையே, அதிமுக சார்பில் சேலம் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெங்கடாஜலம், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதேபோல பாமக வேட்பாளர்கள் அருள் (சேலம் மேற்கு), சதாசிவம் (மேட்டூர்) ஆகியோரும் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பின்னர், ஓமலூர் அதிமுக புறநகர் அலுவலகத்தில் முதலமைச்சர் தலைமையில் பாமக வேட்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக, பாஜக, தமாகா ஆகிய கூட்டணி கட்சிகளின் சேலம் மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்களிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழக அளவில் சேலத்தில் போட்டியிட்ட நமது வேட்பாளர்கள் தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள் என்ற வரலாற்றை படைக்கும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, இன்று இரவு சேலத்தில் தங்கும் பழனிசாமி, நாளை காலை விமானம் மூலம் சென்னைக்கு திரும்புகிறார். அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், திங்கட்கிழமை காலை எடப்பாடியில் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார்.
இதையும் படிங்க: கமலின் கூட்டணியை கைவிட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி: குழப்பத்திற்குள் கூட்டணியா? என விமர்சனம்