வளர்ந்துவரும் மாநகரமான சேலத்தில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அமைக்கப்பட்டு வரும், தமிழ்நாட்டுப் மிக நீளமான இரண்டடுக்கு மேம்பாலத்தின் கட்டுமானப் பணி நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. சேலம் மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டேவருகிறது. இந்நிலையில், சேலத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 2016ஆம் ஆண்டு 320 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமான மேம்பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டு, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
சேலத்தின் மையப்பகுதியான ஐந்து ரோட்டில் நாள்தோறும் ஒன்றரை லட்சம் வாகனங்கள் கடந்து செல்வதாகக் கணிக்கப்பட்டு, ஐந்து ரோடு பகுதியை மையமாகக் கொண்டு இரண்டு தளங்கள் கொண்ட மேம்பாலம் சுமார் 7 கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டது. குரங்குச்சாவடியிலிருந்து ஐந்து ரோடு வரையில் 15 தூண்கள், ஐந்து ரோட்டிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரையில் 32 தூண்கள், புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறுமலர் பள்ளி வரை 38 தூண்கள், புதிய பேருந்து நிலையத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள இறங்குத்தளத்துக்கு 10 தூண்கள், ஏ.வி.ஆர். ரவுண்டானாவிலிருந்து ஐந்து ரோடு வரை 8 தூண்கள், ஐந்து ரோட்டிலிருந்து அழகாபுரம் வரை 31 தூண்கள், அங்கிருந்து ராமகிருஷ்ணா சாலைப் பிரிவு வரை 39 தூண்கல் என மொத்தம் 173 தூண்கள் அமைக்கப்பட்டு சர்வதேச தரத்தில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், ஏ.வி.ஆர். சந்திப்பு முதல் ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு வரையிலான மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
இந்நிலையில் புதிய இரண்டடுக்கு மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் விறுவிறுவென நடந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் இரண்டடுக்கு மேம்பாலம் முதலமைச்சரால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சேலத்தின் போக்குவரத்து நெரிசல் முழுவதும் பெருமளவு குறையும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:
அரியலூர் - பெரம்பலூர் சாலையில் கட்டப்படும் மேம்பாலப் பணியால் பொதுமக்கள் அவதி