சேலம் அடுத்த எடப்பாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற திறப்பு விழா இன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் பேசுகையில், "உயர் நீதிமன்றத்தின் கருத்துருக்களை ஏற்று நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்துமுடிக்கும் வகையில் 51 புதிய நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மாநில அளவில் 17 நீதிமன்றங்கள் புதியதாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது எடப்பாடி பகுதியில் சிறு வழக்குகள் மட்டுமின்றி இதர வழக்குகளையும் விசாரித்து முடித்துவைக்கும் வகையில் முழு அளவிலான நீதிமன்றம் இன்று தொடங்கப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நீதித் துறை உள்கட்டமைப்புக்காக 211 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல் 224 நீதிமன்றங்கள் தமிழ்நாட்டில் தொடங்க ஒப்புதல் பெறப்பட்டு அவற்றில் 209 நீதிமன்றங்கள் தற்போது தொடங்கப்பட்டு செயல்பட்டுவருகின்றன.
முதலமைச்சராக பழனிசாமி பொறுப்பேற்ற கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.1,011 கோடி மதிப்பில் நீதித் துறை உள்கட்டமைப்பு பணிகள் மேம்பாடு செய்யப்பட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 217 புதிய நீதிமன்றங்கள் தமிழ்நாட்டில் திறக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
இந்த விழாவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹில் ரமணி, உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் உள்ளிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.