மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் 104ஆவது பிறந்த நாள் விழா அரசு விழாவாக இன்று தமிழ்நாட்டில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மணிமண்டபத்தில், உள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் ரா. திவாகர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த விழாவில் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஜி. வெங்கடாசலம், சேலம் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் சக்திவேல், வீரபாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் மனோன்மணி, சேலம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு டாக்டர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
விழாவையொட்டி மணிமண்டபம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு விளம்பர வாகனம் மூலம் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆரின் புகழ்பாடும் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன. மேலும் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:எம்.ஜி.ஆரின் 104ஆவது பிறந்தநாள்: முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை