சேலம்: கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் சில நாள்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையால், அம்மாநில அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கபினி அணை நிரம்பிய நிலையில், உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல, கிருஷ்ணராஜசாகர் அணையும் நிரம்பும் நிலையை எட்டியுள்ளதால், அதிலிருந்தும் உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.
14,000 கனஅடி நீர் திறப்பு
இதன் காரணமாக நேற்று (ஆக .09) மாலைமுதல் மேட்டூர் அணைக்கு கூடுதல் தண்ணீர் வரத்தொடங்கியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 3,046 கனஅடி நீர் வீதம் வந்துகொண்டிருந்தது.
இன்று காலை விநாடிக்கு 7,491 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 74.30 கனஅடியாகவும் நீர் இருப்பு 36.52 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன தேவைக்காக 14,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
அதேபோல கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு...'