சேலம் மாவட்டத்திலுள்ள கஞ்சமலை வனப்பகுதி 1,089 ஹெக்டேர் நிலப்பரப்பு கொண்டது. இந்த மலை உச்சியில் கரியப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இதன் அடிவாரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது.
இந்தக் கல்லூரியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கவுரவ் பெகரா என்ற இளைஞர், டிப்ளமோ எலும்பு அறுவை சிகிச்சை துறையில் முதுகலை இறுதி ஆண்டு படித்துவந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கரியப்பெருமாள் கோயிலுக்கு கனவாகாடு பகுதி வழியாக மலைப்பாதையில் கவுரவ் பெகரா அவரது நண்பர்களான நாகேஷ் சைதன்யா, அக்ஷ்ய், அவினாஷ் ஆகியோருடன் சென்றார்.
பின்னர் அங்கிருந்து திரும்பும்போது கவுரவ் பெகராவுகாகு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே அவரை, மலை மீது அமர வைத்து கீழே இறங்கிய மற்ற மாணவர்கள், தண்ணீர் எடுத்துக்கொண்டு மீண்டும் மேலே சென்று பார்த்தபோது பெகரா மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, காவல்துறையினருக்கும் வனத்துறையினருக்கு மாணவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் மலைப்பகுதியில் காவல்துறையினர், வனத் துறையினர் கடந்த 3 நாட்களாக தேடி வந்த நிலையில், கஞ்சமலை உச்சிப்பகுதியில் உடல் அழுகிய நிலையில் கவுரவ் பெகரா சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதுகுறித்து இரும்பாலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மதுபோதையில் இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.