திருச்செங்கோடு கொன்னையாறு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் மின்வாரியத்தில் பணி புரிகிறார். இந்நிலையில் ஜெய்சங்கர் நிலம் வாங்கியது தொடர்பாக நாமக்கல் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் புகார்கள் வந்துள்ளது. புகாரையடுத்து நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ஜெய்சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யாமலும், கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் ஜெய்சங்கர் புகார் அளித்துள்ளார். அதன்படி கடந்த ஐந்தாம் தேதி லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் ஆலோசனைப்படி, 10 ஆயிரம் பணம் தருவதாகக் காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரனை, ராசிபுரம் அருகே ஆண்டகளுர்கேட் பகுதிக்கு வரச்சொல்லி பணம் கொடுத்துள்ளார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ராஜேந்திரனைக் கைது செய்தனர். மேலும், ராசிபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டனர். பின்னர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு, சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இன்று லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட நாமக்கல் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ராஜேந்திரனை, பணியிடை நீக்கம் செய்து சேலம் காவல்துறை துணைத்தலைவர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.