தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் நேற்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அரியலூர், சேலம், தருமபுரி, தூத்துக்குடி, நாகை, நாமக்கல், ராமநாதபுரம், திருவாரூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, குமரி ஆகிய மாவட்டங்களிலுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அந்தந்த பகுதிகளில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் என பலர் பங்கேற்று ஊர்வலமாகச் சென்றனர்.
அனைவரும் சேர்ந்து பெண் குழந்தைகள் பாதுக்காப்பு தின உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். அந்தவகையில், விருதுநகரில் பள்ளி கல்வித்துறை, மாவட்ட குழந்தைகள் நலக்குழு, தனியார் தொண்டு நிறுவனம் ஆகியவை சார்பில் அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி நடைபெற்றது. இந்நிகழ்வில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் குழந்தை தொழிலாளர் தடுக்கும் வழிமுறை, பெண் குழந்தை கல்வி, சமூகத்தில் பெண் குழந்தைகள் நலன்கள் போன்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அந்த உறுதி மொழி பின்வருமாறு:
இந்திய குடிமகனாகிய நான் சாதி, மதம், இனம், மொழி, சமூக, பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைத்துக் குழந்தைகளையும் சமமாக நடத்துவேன். எனது செயல்பாடுகளால் எந்த ஒரு குழந்தையையும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்காத வகையில் கவனமுடன் நடந்துகொள்வேன்.
எனது கவனத்திற்கு வரும் குழந்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் எந்தவொரு பாதிப்பையும் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவேன். மேலும், இதனை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என உணர்ந்து அவர்களின் வளர்ச்சி, பாதுகாப்பிற்கு என்னால் இயன்ற பங்களிப்பை அளிப்பேன். குழந்தைத் திருமணம் பற்றி தெரியவந்தால் அதைத் தடுத்து நிறுத்துவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவேன்.
நான், குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்கிட உறுதுணையாக இருப்பேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கையில் வழங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகளை அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுவேன் என உளமார உறுதி கூறுகிறேன். இவ்வாறான உறுதிமொழியை மாணவர்கள் எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: மாநில பெண்கள் பாதுகாப்பு நாள் - மாணவிகள் உறுதி மொழி ஏற்பு