தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை பரவி வரும் காரணத்தால், பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சேலம் நான்கு ரோடு பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியான சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் இன்று(ஏப்.26) காலை பிளஸ்-1 வகுப்பில் சேர எழுத்து தேர்வு நடக்கிறது என மாணவர்களுக்கு வாட்ஸ் அப்பில் பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் அனுப்பிவைத்துள்ளது.
இதையடுத்து, அப்பள்ளியில் இன்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டனர். கரோனா தொற்று பரவி வரும் நிலையில் பதினொன்றாம் வகுப்பில் சேர தேர்வு வைக்கக்கூடாது எனவும், இந்தத் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்றும், மாணவர்கள் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்குச் சென்று தேர்வு எழுத அமர்ந்தனர். மற்ற மாணவர்கள் பள்ளியின் முன்புறம் நின்று தர்ணா செய்தனர். தொடர்ந்து, மாணவர்களின் பெற்றோர் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தியைத் தொடர்பு கொண்டு இன்று தகுதி தேர்வு நடத்தக்கூடாது என கேட்டுக்கொண்டனர்.
உடனடியாக, அவர் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி பதினொன்றாம் வகுப்பு சேர தகுதி தேர்வு நடத்தக்கூடாது என உத்தரவிட்டு, பள்ளி நிர்வாகத்தினரை கண்டித்தார். இதையடுத்து, ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்து இன்று தேர்வு இல்லை எனத் தெரிவித்து, அவர்களை வீடு திரும்ப அறிவுறுத்தினர்.
பள்ளி முன்பு மாணவர்கள் திரண்டதால் அஸ்தம்பட்டி காவல் துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். மாணவர்கள் திடீரென பள்ளியை முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.