சேலம்: ஆத்தூர் அடுத்த வீரகனூர் அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்றாம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதனிடையே கரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட பள்ளி அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
இதனால் கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் தனியார் பள்ளிகளில் படித்த. தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த அரசு தொடக்கப்பள்ளியில் தற்போது 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது இப்பகுதியில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக, பள்ளி கட்டடத்தின் சுவர்கள் ஈரம் ஏற்பட்டு விரிசல் ஏற்பட்டுள்ளது.
சமூக விரோதிகளின் கூடாராமாக..? பள்ளியா..?
மேலும் பள்ளி கட்டடத்தின் மேற்கூரையில் உள்ள ஓடுகள் உடைந்து, கீழே விழுவதோடு பாதுகாப்பற்ற முறையில் பள்ளி கட்டடம் உள்ளதால் உயிர் பயத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இதனால் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை அச்சத்தோடு பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர்.
பள்ளியின் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள மற்றொரு பழைய கட்டடமும் உள்ளதோடு சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் சமூக விரோதிகளின் கூடாராமாக பள்ளி கட்டடம் மாறி வருகிறது.
எனவே தமிழ்நாடு அரசும், பள்ளிக் கல்வித்துறையும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சிதிலமடைந்த பழைய கட்டடத்தை அகற்றி, தொடக்கப் பள்ளிக்கு புதிய கான்கிரீட் கட்டடம் அமைத்து தர வேண்டுமென கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:'நம்மைக் காக்கும் 48' திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்