சேலத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா தொற்று பாதித்தவர்கள் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையிலும் இன்று (மே.8) முதல் பொதுமக்கள் ரெம்டெசிவிர் மருந்தை வாங்கிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக தனி கவுண்ட்டரும் ஏற்படுத்தப்பட உள்ளது. ரெம்டெசிவிர் மருந்து விற்க கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனைக்கு மருத்துவர்கள் சுஜாதா, வெங்கடேஷ்வரன், பிரித்தா, யசோதா, நித்யபிரியா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை முதல்வர் முருகேசன் பாதுகாப்பு கேட்டு காவல்துறை உயர் அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில், "சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களின் உபயோகத்திற்காக ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய உள்ளதால், பொதுமக்களின் கூட்டத்தை தடுக்கும் வகையில் நெரிசலை கட்டுப்படுத்த பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சேலத்தில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றதாக நேற்று முன்தினம் (மே. 6) இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.