சேலத்தில் தலைகவசம் அணியாமல் வந்தவரிடம், சோதனை மேற்கொண்ட போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ், ஸ்பாட் ஃபைன் என்ற பெயரில் ரூ.200 வசூலித்துவிட்டு, அவரிடம் பணம் பெறவில்லை என்று ரசீது வழங்கியுள்ளார். இதை சமூக ஆர்வலர் ஜெயசீலன் என்பவர், தனது செல்ஃபோனின் பதிவு செய்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்ட சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜை தற்காலிகமாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் வீடியோ எடுத்த சமூக ஆர்வலர் ஜெயசீலன், சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் காவல்துறை அலுவலர்களிடம் சில கேள்விகளை முன் வைத்தபோது, ஆண்டுக்கு சுமார் ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் உடனடி அபராதம் மூலமாக வசூலிக்கப்பட்டு மாவட்ட கருவூலத்தில் செலுத்துவதாக பதிலளித்தனர். இதுகுறித்து மாவட்ட கருவூலத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கீழ் கேள்வி எழுப்பினால், மாநகர காவல் துறை அலுவலர்களிடம் கேட்டு பதில் அளிப்பதாகக் கூறுகின்றனர்.
பொதுமக்களிடம் வசூலிக்கும் தொகை எங்கு செல்கிறது? அவை எதற்காக பயன்படுத்தப்படுகிறது? இதுபோன்ற உடனடி அபாரத வசூலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. சேலத்தில் மட்டும் கோடி கணக்கில் முறைகேடுகள் என்றால், தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான். இதுகுறித்து உரிய ஆதாரத்தோடு சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தேன். மனுவை ஆய்வு செய்த நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.
மேலும், ஸ்பாட் பைன் என்ற உடனடி அபராத தொகை வசூலிப்பதில் உள்ள முறைகேடுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.