சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட குரால்நத்தம் ஊராட்சியில், ஜல்லுத்துமலை அடிவாரப் பகுதியில் வனத்துறையையொட்டி உள்ள பகுதியான சூரியூர் என்ற இடத்தில் மூன்று தலைமுறைகளாக வசித்து வந்த மக்களை கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினர் துணையோடு, வனத்துறை அப்புறப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வனப்பகுதியில் வசிப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, வனத்துறையினர் திடீரென்று மக்களை அப்புறப்படுத்தும் நோக்கில், சுமார் ஐம்பது வீடுகளை இயந்திரங்களை கொண்டு இடித்து தள்ளியது, அவர்கள் பயன்படுத்தி வந்த விவசாய நிலங்களை இயந்திரங்களை கொண்டு சேதப்படுத்தியது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் சேலம் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து முன்னாள் நீதிபதி ஒருவரை ஆணையராக நியமித்து சம்மந்தப்பட்டப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்திட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஆணையர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்கள், வனத்துறையினர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில் ஆணையரின் விசாரணை முடிவடைவதற்கு முன்பாகவே, அங்கு வசித்து வந்த மக்கள் பயன்படுத்தி வந்த விவசாய கிணறுகளை மூடி, வழித்தடத்தில் குழி தோண்டி மக்கள் உள்ளே செல்லாதவாறு வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் உடமைகளை எடுக்க கால அவகாசம் கொடுக்காமலும், அவர்களின் கால்நடைகளை அழைத்து செல்ல நேரம் கொடுக்காமலும் வனத்துறையினர் நடந்து கொண்ட நடவடிக்கை குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் தாமே ஆய்வு செய்வதாகக் கூறி, மாவட்ட சார்பு நீதிபதி செந்தில்குமார், சம்மந்தப்பட்ட பகுதியான சூரியூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், வனத்துறையினரால் சேதப்படுத்தப்பட்ட வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள், கிணறுகள் ஆகியவற்றை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம், மூன்று தலைமுறைகளாக வசித்து வந்ததற்கான ஆதாரங்களைக் கேட்டு பார்வையிட்டார். இதேபோன்று சம்மந்தப்பட்ட பகுதி வனத்துறைக்கு சொந்தமானது என்ற வனத்துறை அலுவலர்கள் கூறும் ஆவணங்களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நீதிபதி விசாரணை மேற்கொண்ட போது, பாதிக்கப்பட்ட மக்கள் சிலர், தரையில் விழுந்து கதறி அழுது, தங்களின் விவசாய நிலம் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாகவும், வனத்துறையினர் நடந்து கொண்ட விதம் தொடர்பகாவும் நீதிபதியிடம் கண்ணீர் மல்க தெரிவித்தனர். இது அனைத்தையும் கேட்டு கொண்ட நீதிபதி, இது தொடர்பாக விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோளை ஏற்று சம்பவ இடத்தை பார்வையிட்டதாகவும் அவர் கூறினார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வனத்துறையினர் தங்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றியுள்ளது, தங்களின் கால்நடைகளுக்கு தீவனம், தண்ணீர் இல்லாமல், தாங்கள் வசித்து வந்த பகுதியிலேயே இருப்பது தொடர்பாக நீதிபதியிடம் எடுத்துரைத்து இருப்பதாகவும், வருவாய்த் துறை, வனத்துறை ஆகிய அரசு அலுவலர்கள் அனைவரும் தங்களை கைவிட்டு விட்ட நிலையில், நீதித்துறையை மட்டுமே நம்பி இருப்பதாகக் கூறி, தங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மக்கள் தொகை கணக்கெடுப்பு - வேறு வழியின்றி தயாராகும் மக்கள்!