சேலம்: மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி எட்டியது. நடப்பாண்டில் இரண்டாவது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு வரும் நீர் முழுமையாக அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. 28 ஆயிரம் கன அடி நீர் அளவு தொடங்கி 55 ஆயிரம் கன அடி வரை நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. அதன்பின்னர் நீரின் அளவு குறைந்ததால் 16 கண் மதகுகள் வழியாக நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று காலை 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு காலை 6.30 மணிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த அளவு காலை 8 மணி முதல் 85 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணையிலிருந்து 85 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், சேலம் ,நாமக்கல் ,ஈரோடு, திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் மேலும் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் உபரி மழை நீரை சேகரிக்கும் திட்டம் இல்லை - முன்னாள் பொதுப்பணி துறை பொறியாளர் வீரப்பன்