சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே செல்லியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கெங்கு (80). இவர் இரண்டு மகன்களோடு லட்சுமணதீரத்தம் பகுதியில் வசித்து வந்தார். கெங்கு, கடந்த சில நாள்களாக அக்கம்பக்கத்தினரிடம் சென்று யாசகம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், அதிருப்தியடைந்த கெங்குவின் மகன்களான சக்திவேல், வெங்கடேசன் ஆகியோர் அவரைக் கண்டித்துள்ளனர். ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து யாசகம் பெற்று வந்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த மகன்கள் நேற்று கெங்குவைக் கண்டித்து தாக்கியுள்ளனர். அப்போது கீழே விழுந்த அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக்திவேல், வெங்கடேசன் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் இதுகுறித்து அப்பகுதியினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.