சேலம்: கரோனா காலத்தில் அரளி சாகுபடி மற்றும் விற்பனை எதிர்பார்த்த அளவு நடைபெறாததால் விவசாயிகள் பொருளாதார இழப்பில் சிக்கி தவிப்பது குறித்த கள நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்!
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் உள்ள கூட்டாறு, தும்பல் பட்டி, திப்பம்பட்டி, கம்மாளப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலையோர கிராம பகுதிகளில் அரளி மலர் சாகுபடி பல ஆண்டுகளாக சுமார் 1000 ஹெக்டேர் விவசாய நிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வறண்ட நிலமாக இருந்தாலும் ஓரளவிற்கு தண்ணீர் வசதி இருந்தால் போதும் என்பதால் பனமரத்துப்பட்டி ஒன்றிய விவசாயிகள் அரளிப் பூ சாகுபடி செய்வதில் தலைமுறை தலைமுறையாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அரளி பூ
இங்கு விளையும் அறுவடை செய்யப்படும் அரளி மொட்டுக்கள், சென்னை, கன்னியாகுமரி ,கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், அண்டை மாநிலமான கர்நாடகா ,ஆந்திரா விற்கும் மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களுக்கும் நாள்தோறும் சுமார் 30 டன் அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
விற்பனை பாதிப்பு
இது தொடர்பாக நம்மிடம் கம்மாளப்பட்டி பகுதியில் அரளி விவசாயம் செய்யும் விவசாயிகள் கூறுகையில் ," கடந்த 8 மாதமாக ஊரடங்கு எங்களை கடுமையாக பாதித்திருக்கிறது. ஊரடங்கு தளர்வு அறிவித்து நடைமுறைப்படுத்தி உள்ளபோதிலும் அரளி மொட்டுக்களை வியாபாரிகளிடம் கொண்டு சேர்ப்பதில் சிரமத்தை சந்தித்து வருகிறோம்.
விவசாயிகளிடமிருந்து அரளி மொட்டு களை வாங்கி வெளி நகரங்களுக்கு அனுப்பி வியாபாரம் செய்யும் வணிகர்கள் கூறுகையில் " ஊர் இடங்கள் உழவர் சந்தைகளில் உள்ளே பூக்கள் வியாபாரம் செய்ய அரசு அனுமதிக்கவில்லை . அதனால் எங்களுக்கென்று தனியாக சேலம் பனமரத்துப்பட்டி பகுதியில் அரளி பூ விற்பனை செய்ய சந்தை ஏற்படுத்தி தர அரசு முன்வர வேண்டும்.
டார்ச்லைட் தட்டுப்பாடு
மேலும் அரளி மொட்டுக்களை பதப்படுத்தி வைத்து விற்பனை செய்ய வேண்டி உள்ளதால் அதற்கென பிளாஸ்டிக் கவர்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. எனவே அரசு அறிவுறுத்தலின்படி சுற்றுப்புற சூழலுக்கு கெடுதல் ஏற்படாத வகையில் பிளாஸ்டிக் கவர்களை தயாரித்து விற்பனை செய்ய அனுமதி வழங்கினால் அரளிப்பூ வணிகம் தடை இல்லாமல் நடை பெற உதவியாக இருக்கும்" என்று கோரிக்கை விடுத்தனர்.
நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரையில் மட்டுமே அரளி மொட்டுக்களை பறிக்கும் வேலையில் விவசாயிகள், பூப்பறிக்கும் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். அப்போது அவர்களுக்கு வெளிச்சத்திற்காக வழங்கப்படும் டார்ச் லைட்டுகள் கிடைப்பதில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதற்கென தோட்டக்கலைத்துறை சார்பில் டார்ச் லைட்டுகள் பேட்டரிகள் மானிய விலையில் வழங்க வேண்டும்" என்று அரளி தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குளிர்பதன கிடங்கு தயார்
விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து சேலம் மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பிரபாகரனிடம் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது அவர் ," பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் அரளிப்பூ விவசாயம் செய்வோருக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கைகளை துறை சார்பில் எடுக்கப்படும்.
மேலும் அரளி பூ மொட்டுக்களை பதப்படுத்தி விற்பனை செய்ய குளிர்பதனக் கிடங்கு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மிக விரைவில் கோண மடுவு பகுதியில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: கோயில் கருவறையைக் கண்ட அரளி பூ! - கீழே கொட்டப்படும் அவலம்!