சேலம்: மின்பகிர்மான வட்டத்தில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'சேலம் மின் பகிர்மான வட்டத்தில் சீரான மின் வநியோகம் செய்வதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி அனைத்து மின் பாதைகளிலும் மின் கம்பிகள் பாதுகாப்பாக உள்ளதா, மரக்கிளைகள் மின் கம்பிகள் மீது உரசியபடி செல்கிறதா? என கண்டறிந்து தமிழ்நாடு மின்சார மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறிவுரையின்படி, ஜூன் 19 முதல் மின் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று மின்சாரம் சீர் செய்யப்பட்டு வருகிறது.
வேகம் காணும் மின் சீரமைப்புப் பணிகள்
சேலம் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கந்தம்பட்டி துணை மின் நிலையம், அஸ்தம்பட்டி துணை மின் நிலையம், கருப்பூர் துணை மின் நிலையம், மல்லூர் துணை மின் நிலையம், வீரபாண்டி துணை மின் நிலையம், உடையாப்பட்டி துணை மின் நிலையம், வேம்படிதாளம் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பல்வேறு 22 கே.வி உயர் அழுத்த மின் பாதைகளில் கடந்த 19ஆம் தேதி முதல் மின் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
சேலம் மின் பகிர்மான வட்ட கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஆறு கோட்டங்களின் உயர் அழுத்த மின்னூட்ட பாதைகளில், கடந்த 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை அனைத்து பொறியாளர்கள், 300 களப்பணியாளர்களைக் கொண்டு 726 இடங்களில் மின்பாதையில் உரசிக்கொண்டிருந்த மரக்கிளைகள் வெட்டப்பட்டுள்ளன.
மேலும் 135 இடங்களில் உள்ள பழுதடைந்த மின் கம்பி இணைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ளன.
அதேபோல் 472 இடங்களில் பழைய இன்சுலேட்டர்கள் கழற்றப்பட்டு, புதிய பாலிமர் இன்சுலேட்டர்களாக மாற்றப்பட்டன.
இதுபோன்று பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சீரான மின்சாரம் வழங்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகள் வரும் ஜூன் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வரதட்சணை கொடுமை- இளம்பெண் தற்கொலை- முக்கிய ஆதாரம் சிக்கியது!