சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த பெருமாள்கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் உதயகுமார் (19). பொறியியல் கல்லூரி மாணவரான இவர், பல்வேறு புதிய வகை கருவிகளைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் கொண்டவர்.
தற்போது பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து வந்த வெட்டுக்கிளிகள் விவசாய விளைப்பொருள்களை அழித்துவருவதைக் கேள்விப்பட்ட உதயகுமார், அவற்றை அழிப்பதற்கு கருவி ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்திக்கு உதயகுமார் அளித்த பிரத்யேக பேட்டியில், "சிறுவயது முதலே புதிய புதிய கண்டுபிடிப்புகளை செய்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம். அதனால் மெக்கானிக்கல் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்து, தற்போது மூன்றாம் ஆண்டு படித்துவருகிறேன்.
வெட்டுக்கிளிகள் இந்திய விவசாயத்திற்கு தற்போது பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அந்த வெட்டுக்கிளிகள் கூட்டம் தமிழ்நாடு வந்தால் அவற்றை அழிப்பதற்கு ஒரு புதிய கருவியை 12,000 ரூபாய் செலவில் கண்டுபிடித்து உள்ளேன்" என்றார்.