சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் சேலத்திற்கு பொது மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களை மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தி மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். நோய்த் தொற்று அறிகுறி உள்ளவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் இருவர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும், சென்னையில் இருந்து சேலத்திற்கு விமானத்தில் வந்த 5 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு
சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதேபோல, கர்நாடகாவில் பணிபுரிந்து வந்த ஐடி ஊழியர் பாலமுருகன்(38), அவரின் மனைவி முத்துலட்சுமி இருவரும் நேற்று (ஜூன் 24) இரவு சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றனர். இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, உறவினர் வீட்டுக்குச் சென்ற சுகாதாரத் துறையினர் பாலமுருகன், முத்துலட்சுமி இருவரையும் தனி ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்கள் தங்கியிருந்த பகுதி முழுவதும் எடப்பாடி நகராட்சித் மற்றும் சுகாதாரத் துறையினர் கிருமி நாசினி மருந்து தெளித்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று (ஜூன் 25) ஒரே நாளில் சேலத்தில் 130 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.