சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் கரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சேலம் மாவட்டம் மட்டுமல்லாது நாமக்கல், ஈரோடு மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத் துறை, காவல் துறை ஆகியவற்றின் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும் கேட்டறிந்த தலைமைச் செயலர் இறையன்பு, மாவட்டத்தில் தொற்று பரவலை பூஜ்ய நிலைக்கு கொண்டுவர அனைவரும் இணைந்து நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.