சேலம்: ஆத்தூர் அருகேயுள்ள வடசென்னிமலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகின்றது.
இந்த கல்லூரியில் ஆங்கிலத் துறையில் பணியாற்றிய பேராசிரியர் ராம்சங்கர், கடந்த 2013ஆம் ஆண்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, திருநெல்வேலி கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
பின்பு மீண்டும் இதே கல்லூரிக்கு பணி மாறுதலில் வந்துள்ளார். இதனிடையே பேராசிரியர் ராம்சங்கரின் பாலியல் தொல்லை வழக்கில் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியளித்த கெளரவ விரிவுரையாளர் குணசேகரனை ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி அடியாட்கள் கொண்டு ராம்சங்கர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்த குணசேகரன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தான் தாக்கப்பட்டது குறித்து ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பேராசிரியர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்களும், கெளரவ விரிவுரையாளர்களும், முன்விரோதம் காரணமாக கெளரவ விரிவுரையாளரை தாக்கிய பேராசிரியர் ராம்சங்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அவரை வேறு கல்லூரிக்கு பணி மாறுதல் செய்ய வேண்டுமெனவும் கூறி கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆத்தூர் காவல் துறையினர், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து பேராசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.