சேலம் பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (31) ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றிவருகிறார். இவரது மனைவி சங்கீதா (27). இவர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சீனிவாசனுக்கும் சங்கீதாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த சங்கீதா நேற்று முன்தினம் (ஆக. 26) அவரது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகலறிந்த வந்த கன்னங்குறிச்சி காவல் துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவுசெய்து, கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் இறப்பதற்கு முன்பாக, "என்னை யாருக்கும் பிடிக்கவில்லை, எனவே எதற்கு வாழ வேண்டும் என்று இந்த முடிவை எடுத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்" என்று தனது சகோதரிக்கு ஆடியோ (கேளொலி) பதிவுசெய்து அனுப்பிவைத்துள்ளார். தற்போது சங்கீதாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து சங்கீதாவின் பெற்றோர், உறவினர்கள் கூறும்போது:
சங்கீதாவை பணம் நகை கேட்டு அடிக்கடி கணவன் வீட்டார் துன்புறுத்திவந்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சங்கீதாவிடம் குடும்பச் சொத்தை பிரித்து வாங்கி வருமாறு வற்புறுத்தியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த சங்கீதா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். எனவே சீனிவாசன் குடும்பத்தார் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.