சேலம், சங்ககிரி அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவனடியார் சரவணன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கோரிக்கை விடுத்தார்.
சேலத்தில் உள்ள சரவணனின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அர்ஜூன் சம்பத், தொடர்ந்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இதுகுறித்து மனு அளிக்க வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சேலம் சிவனடியார் சரவணன் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் காவல் துறையினருக்கு தொடர்பு இருப்பதால், சாத்தான்குளம் விவகாரம் போன்று நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும். தற்போது சரவணன் குடும்பத்தினர் மிரட்டப்பட்டுள்ளதால் அவர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலைக்கு முன்பு சரவணன் வெளியிட்டுள்ள வீடியோவை மரண வாக்குமூலமாக எடுத்துக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.
மேலும், சரவணன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் காவல் ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாடு முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பாக அறவழியில் போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தார்.