தமிழில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களும், கீழமை நீதிமன்றத் தேர்வில் கலந்துகொள்ளலாம் என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட வாரியாக நடைபெற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டங்கள் கீழ்வருமாறு.
கன்னியாகுமரி
தமிழில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களும், கீழமை நீதிமன்றத் தேர்வில் கலந்துகொள்ளலாம் என்ற டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணையைத் திரும்பப் பெற வலியுறுத்தி சேலம் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவர்களுக்கு உரிமையியல் நீதிபதி தேர்வு எழுதும் அரசு ஆணையை ரத்து செய்யக் கேட்டு நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நீதிமன்ற பணி புறக்கணிப்பு செய்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தேர்வாணையத்தின் மூலம் நடைபெறும் வழக்கறிஞர்கள் தேர்வில் தமிழ் தெரியாதவர்களும் தேர்வு எழுதலாம் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிக்கை வைத்தனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள நீதிமன்ற நுழைவாயில் முன்பு மாவட்டத்தைச் சேர்ந்த 600 வழக்கறிஞர்கள், நீதிபதி தேர்வுக்குத் தமிழ் தேவையில்லை என்ற அரசு உத்தரவை உடனே திரும்பப் பெறக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆண் வழக்கறிஞர்கள் பெண் வழக்கறிஞர்கள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தினர். இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை கும்பகோணம் ஆகிய பகுதிகளில் நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நீதிமன்ற பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தமிழ் மொழி எழுதப் படிக்கத் தெரியாதவர்களும் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பினை திரும்பப் பெறக் கோரி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் பணிகளைப் புறக்கணித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
தேனி
தேனி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு சுமார் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் போடியில் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் அருகே 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர் சங்கங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழக அரசின் இந்த அரசாணையைக் கண்டித்து உரையாற்றினர்.