மத்திய அரசின் மோட்டார் வாகனச் சட்டம் 2019ஐ திரும்பப் பெற வேண்டும், சேலம் மாவட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்களின் பிரச்னைகளை தீர்க்க முத்தரப்பு குழு கூட்டத்தை ஆட்சியர் தலைமையில் நடத்த வேண்டும், மானிய விலையில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு எரிபொருள் வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஏஐடியுசி சார்பில் ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சேலம் மாவட்ட ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் முருகன் கூறுகையில், ’சேலம் மாவட்டத்தில் ஆர்டிஓ எல்லை பிரச்னையால் ஆட்டோ தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நகரத்திலிருந்து கிராமப் பகுதிக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும்போது எல்லை மாறி வந்து விட்டதாகக் கூறி காவல்துறையினரும் போக்குவரத்துத் துறையினரும் ஆட்டோ தொழிலாளர்களின் உரிமத்தை வலுக்கட்டாயமாக பெறுகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடு இல்லாத ஆட்டோ தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்டோ தொழிலாளர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகிய எரிபொருள்களை வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் ஓலா, உபர் கால் டாக்ஸி, பைக் டாக்ஸி போன்ற தனியார் நிறுவனங்களைத் தடை செய்ய வேண்டும். ஆட்டோக்களில் பொதுமக்களின் உபகரணங்களை எடுத்துச் செல்லும்போது அதிகப்படியான பாரம் ஏற்றுவதாகக் கூறி, வழக்கு தொடுப்பதையும் லஞ்சம் பெறுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் மோகன், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் பரமசிவம், ஏஐடியுசி தனியார் லாரி ஓட்டுநர் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க: 'பத்தாவது பட்ஜெட் பத்தாத பட்ஜெட்' - ஸ்டாலின் விமர்சனம்