சேலம்: மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உரிமையாளர்கள், பல்வேறு துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பேசிய மாவட்ட ஆட்சியர், “கரோனா பரவாமல் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நோய் பரவலை தடுப்பதற்கு அரசு விதித்துள்ள விதிமுறைகளை மீறுவோர் மீதும், கடைபிடிக்காதவர்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை மீறும் தனிநபர்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் அபராதம் விதித்திடவும் அரசு ஆணையிட்டுள்ளது.
அரசு விதிமுறைகளின்படி தனிமைபடுத்துதலுக்கான விதிகளை மீறிய 9 நபர்களுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.4,500 அபராதமும், முற்றிலும் முகக்கவசம் அணியாதவர்கள் அல்லது வாய், முகத்தை மறைக்கும் வகையில் முகக்கவசம் அணியாத 6,938 நபர்களுக்கு தலா ரூ.200 வீதம் ரூ.13.88 லட்சம் அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்பிய 28 நபர்களுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.14,000 அபராதமும், சமூக இடைவெளியை பின்பற்றாத 125 நபர்களுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.62,500 அபராதமும் என மொத்தம் சேலம் மாவட்டத்தில் செப்.28 வரை 7,100 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து ரூ.14,68,600 விதிமீறல்களுக்கான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உரிமையாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளியை முழுமையாக பின்பற்றுவதையும், பணிபுரிபவர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதையும், ஒவ்வொரு கடைகளின் முகப்பில் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில் கிருமிநாசினி திரவம் அல்லது தண்ணீர் தொட்டியுடன் கை கழுவுவதற்கான சோப்பு உள்ளிட்டவற்றையும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
மேலும், அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் முழுமையாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு அரசின் விதிமுறைகளை பின்பற்றாதது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.