மதுரை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் முளன்குழியைச் சேர்ந்த ரோஸ்மேரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார்.
அதில், "எனது இளைய மகன் லிவின்ராஜை மார்த்தாண்டம் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் விசாரிக்க வேண்டும் எனக் கூறி கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அழைத்துச் சென்றனர். ஷபிதா, ராணி ஆகிய இருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்தனர்.
ஷபிதா, ராணி ஆகிய இருவரும் அளித்த பொய் புகாரின் அடிப்படையில், எனது மகனை அழைத்துச் சென்று காவல் துறையினர் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் ஏப்ரல் 30ஆம் தேதி எனது மகன் உயிரிழந்தார்.
இந்த வழக்கை கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். இந்த வழக்கை அவர்கள் விசாரித்தால் எனது மகனின் மரணத்திற்கான காரணம் தெரியவராது. ஆகவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:பொது இட விபத்துகளில் பலியாவோருக்கான இழப்பீட்டில் பாகுபாடு: உரிய விதிகள் வகுக்க உத்தரவு