மதுரை: மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் அசோக்குமார் (38), வீடுகளுக்கு தண்ணீர் பாட்டில்களை விநியோகம் செய்யும் பணியைச் செய்து வருகிறார். இந்தப் பணிகளோடு, சுற்றுச்சூழல், மரம் நடுதல், வாக்களித்தல், பனைமரம், போக்குவரத்து ஆகிய விசயங்களில் பொதுமக்களிடம் மதுரையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக மதுரை அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் இன்று காலை முதல் குடுகுடுப்பைக்காரர் வேடத்தில், துணிப்பை பயன்படுத்துவது குறித்தும், நெகிழி பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், அவர்களுக்கு துணிப்பைகளை இலவசமாக வழங்கியும் உற்சாகப்படுத்தினார்.
இதுகுறித்து அசோக்குமார் கூறுகையில், 'இந்த பூமியை தூய்மையாகவும், பசுமையாகவும் பாதுகாத்து நமது வருங்காலத் தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டிய நமது கடமையாகும். சந்தைக்கு வருகின்ற பொதுமக்களிடம் வியாபாரிகள் நெகிழிப் பைகள் வழங்குவதை ஊக்குவிக்கக்கூடாது. துணிப்பைகளைக் கொண்டு வர வலியுறுத்த வேண்டும். அப்போதுதான் இந்த மண்ணையும், பூமியையும் நாம் காப்பாற்ற முடியும்' என்றார். அசோக்குமார் இலவசமாக வழங்கிய துணிப்பைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: செடியை வைத்து அப்துல் கலாம், விவேக் படங்களை வரைந்த ஆசிரியர் செல்வம்