மதுரை தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பளவில் 1, 264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக 2018ஆம் ஆண்டு ஜுன் மாதம் அறிவிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டினார்.
இதற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த ஜுன் மாதம் 10ஆம் தேதி தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை அலுவலர்கள் , மத்திய குழுவினர், ஜப்பானிய நிதிக்குழுவினர் ஆகியோர் இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது தமிழ்நாடு சுகாதாரத்துறை அலுவலர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும்; எனவே மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் எனவும் தெரிவித்தனர்.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் 199.24 ஏக்கரில் மருத்துவமனை அமைப்பதற்கும்; 20 ஏக்கர் இந்தியன் எண்ணெய் நிறுவன குழாய் வழித்தடத்திற்கும்; 5 ஏக்கர் நிலம் சாலைப் பணிகளுக்கும் என வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு வருவாய்த்துறை தொடர்பான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்திற்குச் செல்வதற்கான சாலைப் பணிகள் மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கூத்தியார் குண்டு விலக்கிலிருந்து கரடிக்கல் வரை, மத்திய சாலை நிதித் திட்டத்திலிருந்து ரூ.21 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 6.4 கி.மீ.நீளத்திற்கு சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் மருத்துவமனை கட்டடப் பணிகள் தொடங்குவதற்கு முன்பாக அப்பகுதியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.12 அடி நீளம் 10 அடி உயரம் கொண்ட சிலாப்கள் தயாரிக்கப்பட்டு சுற்றிலும் பதிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 1500 சிலாப்கள் தயாரிக்கப்படுவதாகவும்; இந்தப் பணியானது ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படும் எனவும் ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: