“மாதவிடாய் காலங்களில் தங்களது நாப்கினை பயன்படுத்தினால் பெண்கள் நீளம் தாண்டலாம், உயரம் தாண்டலாம் என்று விளம்பரம் செய்யும் நிறுவனங்கள், சுத்தமான எங்கள் நாப்கினை பயன்படுத்தினால் கோயில்களில் விளக்கேற்றலாம், பிற மங்கல காரியங்களில் ஈடுபடலாம் என்று விளம்பரம் தருவார்களா?” என்று கேள்வி எழுப்புகிறார் எழுத்தாளர் ஓவியா.
இயற்கையே கடவுள் என்றே பல மதக்கோட்பாடுகள் நமக்கு உணர்த்துகின்றன. பெண்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் மாதவிடாய் என்பது இயற்கையே. அந்த இயற்கையை வணங்க மறுத்தாலும் வரவேற்கவாவது செய்யலாமே என்று தான் பெண்கள் கருதுகின்றனர். ஆனால், மாதவிடாய் காலங்களில் மங்கள காரியங்களுக்கு தடை விதிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை 'தீட்டு' என்று ஒதுக்கி வைக்கும் இழிவு இன்னும் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு தடை விதித்து, பெண்கள் கோயிலுக்குள் நுழைய ஆதரவாக இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் சமூகத்தின் சிந்தனை இன்னும் பின்னோக்கியே செல்கிறது. அதற்கான அறிகுறி தான் மதுரை மாவட்டத்தின் இன்னும் சில கிராமங்களில் நிலவி வரும் மூட நம்பிக்கை.
மதுரை மாவட்டம் பேரையூரிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கூவலப்புரம் ஊராட்சி. இந்த கிராம ஊராட்சிக்குள்பட்ட புதுப்பட்டி, சின்னையாபுரம், கோவிந்தநல்லூர், அழகாபுரி ஆகிய கிரமாங்கள் தங்கமுடி சாமி எல்லைக்குட்பட்டவை என்று அங்கு வாழும் குறிப்பிட்ட சமூகத்தினரால் கூறப்படுகிறது. இந்த குறிப்பிட்ட சமூகத்தினர் காலங்காலமாகவே சில பழக்க வழக்கங்களை கடைபிடித்து வருகின்றனர். அவற்றுள் மிகவும் மோசமான ஒன்று தான் மாதவிடாய் காலங்களில் பெண்கள் ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள ஓர் அறையில் ஒதுக்கி வைக்கப்படும் அவலம்.
இதற்காக முட்டுதுறை என்றழைக்கும் பகுதியில் இருஅறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறைக்கு வெளியே மரத்தில் ஏராளமான துணிப்பைகள், சாக்குகள் தொங்க விடப்பட்டுள்ளது. இந்த பைக்குள் மாதவிடாய் ஏற்பட்டு தனியாக ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு தேவையான தட்டு, டம்ளர், துணிகள் போன்ற பொருட்கள் இருக்கும். இவற்றை அவர்களது மாதவிடாய் காலங்களில் மட்டுமே பெண்கள் பயன்படுத்துவார்கள். மாதவிடாய் காலங்களில் இந்த ஊரைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவிகளும் வேலைக்குச் செல்லும் பெண்களும் இந்த அறையில் தங்கியிருந்தே செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு ஒதுக்குப்பட்டுள்ள அந்த இரண்டு அறைகளும் பாதுகாப்பின்றியும் அடிப்பைடை வசதிகள் இன்றியும் இருக்கிறது. மேலும் மழை காலங்களில் அந்த அறையின் கூரைகள் இடிந்து விழும் வாய்ப்புகளும் அதிகம்.
இந்நிலையில் இந்த காலத்திலும் இப்படியொரு அவலமா என பலர் கேள்வி எழுப்பிய நிலையில், "இந்த கிராமத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தங்கமுடி சாமிக்கு ஆகாது என்பதால் இதை செய்து வருகிறோம். இவ்வாறு பல தலைமுறைகளாக நாங்கள் பின்பற்றி வருவதால், எங்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை, இதில் தவறு இருப்பதாகவும் நாங்கள் கருதவில்லை" என கிராம மக்கள் தெரிவித்தனர். பெண்கள் எல்லை தாண்டி பறந்து பல சாதனைகள் படைத்து வரும் இக்காலகட்டத்தில் சாதரான ஹார்மோன் பிரச்னைக்காக, அவர்களை ஓர் எல்லைக்குள் அடைத்து வைக்கும் இந்த கிராமங்களின் முட்டாள்தனமான மூடநம்பிக்கைகள் சமூகத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதையும் படிங்க:
68 கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் சோதனை... தகாத வார்த்தைகளால் திட்டிய முதல்வர்